ரூ.8 கோடி ஷூ , மேக் அப் பொருட்கள் சென்னை துறைமுகத்தில் பறிமுதல்
சென்னை, சென்னை துறைமுகத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 8.4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
வெளிநாடுகளில் இருந்து, கப்பல் வாயிலாக சென்னை துறைமுகத்திற்கு, அதிகளவிலான பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. ஆனால், சுங்கத்துறையின் துறைமுக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், அவ்வப்போது மட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களின் கன்டெய்னர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர்.
அப்போது, சந்தேகிக்கும்படி உள்ள இரு கன்டெய்னர்களை திறந்து பார்த்ததில், பிரபல நிறுவன பெயரில் காலணிகள், உயர்ரக அழகு சாதன பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு 8.4 கோடி ரூபாய். இவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவை எங்கிருந்து வந்தன, எத்தனை பேர் கைது, எந்த நாளில் பறிமுதல் செய்யப்பட்டது போன்ற எந்த விபரங்களையும், சுங்கத்துறை துறைமுக அதிகாரிகள் வெளியிடவில்லை.
இது குறித்து சென்னை சுங்கத்துறை தலைமை கமிஷனர் ஏ.ஆர்.எஸ். குமாரை தொடர்பு கொண்டதற்கு, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.