தென்சென்னையின் 36 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க தனியாருக்கு அனுமதி
சென்னை, தமிழகத்தில் தற்போது, 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.
புதிதாக கொண்டு வரப்படும் திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை மினி பேருந்துகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில், மே 1ம் தேதி முதல், 72 வழித்தடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதற்கட்டமாக மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தென்சென்னை பகுதி மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார், சென்னை தெற்கு, தென்சென்னை தென்மேற்கு, ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட, 36 வழித்தடங்களில், மினி பேருந்துகளை இயக்க அனுமதி பெற, 212 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில், 36 பேர் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான அனுமதி உத்தரவை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து, தனியார் மினி பேருந்துகள், மே 1ம் தேதி முதல், மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.