விண்ணப்பித்து ஆறு மாதங்களாகியும் கடைகளுக்கு உரிமம் கிடைக்க வில்லை அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டல குழு கூட்டம், நேற்று முன்தினம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில், துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது, கவுன்சிலர்கள் பல புகார்களை கூறினர்.
ரூ.17 லட்சம்
லட்சுமி, அ.தி.மு.க., 191-வது வார்டு: முத்து நகர், கிருஷ்ணா நகர், செழியன் நகர், ஜெயச்சந்திரன் நகரில் உள்ள பூங்காக்களை பராமரிக்க வேண்டும்.
ஜல்லடியன்பேட்டை ஏரியில் இருந்து வெளியேறும் நீர் செல்ல மூடுகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபு, தி.மு.க., 189-வது வார்டு: கடைகளுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதங்களாகியும், உரிமம் கிடைக்கவில்லை. ஆனால், உரிமம் பெறவில்லை என, சீல் வைப்பது மட்டும் உடனே நடக்கிறது.
வார்டில், 17 லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி உள்ள வணிக வளாகத்தின் உரிமம் புதுபிக்கப்படுவது ஏன்.
கைவேலி சிக்னல்- முதல் பாலாஜி நகர் சிக்னல் வரை உள்ள கடைகள் அகற்றப்படவில்லை.
ஒரே ஒப்பந்ததாரர், 8 நிறுவனங்களை பதிவு செய்து, பல்வேறு பணிகளுக்கு டெண்டர் எடுப்பதால், எந்த வேலையும் முடிவதில்லை.
பிரகாஷ், அ.தி.மு.க., 190வது வார்டு: எங்கள் வார்டில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, நீர் தொட்டிகளில் மெட்ரோ வாட்டர் நிரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
வரி ரசீது
ஸ்டெர்லி ஜெய், தி.மு.க., 187வது வார்டு: பூங்கா பராமரிப்பாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.
மழைநீர் வடிகால்வாய் பணிக்காக அகற்றப்பட்ட மின் கம்பங்கள், பணி முடிந்து ஆறு மாதங்களாகியும், இன்னும் அமைக்கப்படவில்லை.
தவிர, மழைநீர் கால்வாய் பல இடங்களில் இணைக்கப்படாததால், வீட்டின் முன் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கட்டடம், கழிப்பறை சிதிலமடைந்துள்ளது. இதுகுறித்து, பல முறை சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
சதீஷ்குமார், அ.தி.மு.க., 182வது வார்டு: இ- – சேவை மையத்தில், இன்னும் காலி பணியிடம் நிரப்பப்படாமல் மூடியே உள்ளது.
வருமான வரி துறையினர் சார்பில் புதிதாக பிரிக்கப்பட்ட வார்டின் வரைபடம் இன்னும் வரையறுக்கப்படாததால், எங்கள் வார்டில் உள்ள கடைகளின் வரி ரசீதுகளில், வேறு வார்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கள ஆய்வு
ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த எம்.ஜி.ஆர்., சாலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, பல முறை நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மொபைல் போன்’ வாயிலாக தொடர்புகொள்ள முயற்சித்தாலும் தொடர்புகொள்வதில்லை.
இவ்வாறு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் அடுக்கடுக்கான புகார்களை கூறினர். அதன் பின், மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசினார்.
அவர் பேசியதாவது:
சந்தியா நகர் பின்புறமுள்ள சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.
ஆனால், ஒரு கழிப்றை கட்டினால், இது வனத்துறைக்கு சொந்தமானது என தடை விதிக்கிறீர்கள்.
கவுன்சிலர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீதும், நாளை முதல் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முடிக்க வேண்டிய சிறு பணிகளை நாளையே முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், ஒரு மனதாக 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.