ஐ.பி.எல். , டிக்கெட் ‘போலி லிங்க்’ ரசிகர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னை, ஐ.பி.எல்., போட்டிக்கான டிக்கெட் விற்பனை என்ற பெயரில், சமூக வலைதளங்களில், போலியான லிங்குகள் பரவி வருவதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என, சென்னை காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.
இந்தியன் பிரிமியர் லீக், 18வது சீசன் வரும், 21ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான பயிற்சியில், சி.எஸ்.கே., – மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட, 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் துவங்காத நிலையில், சமூக வலைதளங்களில் ‘புக் யுவர் டிக்கெட் நவ்’ என்ற பெயரில், போலியான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதை உண்மை என நினைத்து பலர், பணத்தை இழந்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை காவல் துறையினர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை:
சமூக வலைதளத்தில் போலியாக வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
டிக்கெட் விற்பனைக்கான தேதி மற்றும் அதற்கான இணையதளம் குறித்து, முறையான அறிவிப்பு வெளியாகும். அதன்பின், கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டி, 23ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் துவங்கப்படவில்லை.
அதற்குள், சமூக வலைதளத்தில் டிக்கெட் விற்பனை என வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.