ஆண்டுதோறும் உரிம கட்டணம் வணிகர்சங்க பேரவை வலியுறுத்தல்
சென்னை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை வாயிலாக, வணிகர்களின் கடைகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு உரிய வணிக உரிம தொகையை மொத்தமாக கட்ட வேண்டும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகம் அழிந்து வருகிறது. இந்த நேரத்தில் மூன்று ஆண்டுக்குரிய உரிம தொகையை மொத்தமாக கட்ட வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.
இந்த செயல், ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவாக, சிறு வணிகத்தை மொத்தமாக முடக்கி அழிக்கும் செயல் என, வணிகர்கள் தங்களுக்கு பேசிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
வணிகர்கள் ஒரு கடைக்கு, 11 மாதம் தான் ஒப்பந்தம் செய்ய முடியும். இப்போது இருக்கும் சூழலில், மூன்று ஆண்டுகளுக்கு கடைகள் தொடர்ந்து செயல்பட முடியுமா என்பது சந்தேகம் உள்ளது.
மேலும், கடைகளுக்கு வணிக உரிமம் மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக, வணிக உரிமக் கட்டணத்தை ஆண்டுதோறும் கட்டும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.