குடிநீர், குப்பை பிரச்னையால் தி.மு.க .,விற்கு அவப்பெயர்
ஆலந்துார், ஆலந்துார் மண்டல குழு கூட்டம், தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல், ‘ஹெல்த் அண்டு வெல்த்’ மையத்தை திறத்தல், துளசிங்கபுரத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.
நங்கநல்லுாரில் புதிதாக கட்டப்பட்ட, 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பழைய குடிநீர் வரி அகற்றப்படாமல், புதிய வரியும் இருப்பதாகவும், வாரியத்தின் சார்பில் முகாம் நடத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், 167வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் துர்காதேவி கோரிக்கை வைத்தார்.
மின்சாரம், குடிநீர் வாரியம், குப்பை பிரச்னையால் தான், தி.மு.க.,விற்கு அவப்பெயர் ஏற்படுகிறது என, 156வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செல்வேந்திரன் வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியபோது, ”மண்டலம் முழுதும் உள்ள நாய், பன்றி, மாடுகள் பிரச்னை மீது, அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். கவுன்சிலர்கள் பதிவு செய்யும் புகார்களை, தொடர்ந்து ‘பாலோ- அப்’ செய்ய வேண்டும்,” என்றார்.
கூட்டத்தில், 49 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன