கல்யாண சுந்தரர் – மனோன்மணி திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவொற்றியூர், கல்யாண சுந்தரர் – மனோன்மணி தாயார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் இந்தாண்டு மாசி பிரமோத்சவ விழா, 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, 10ம் தேதி நடந்தது.
மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் – மனோன்மணி தாயார் திருக்கல்யாண வைபவம், நேற்று காலை நடந்தது. முன்னதாக, சீர் வரிசை, கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, வசந்த மண்டபத்தில், பழங்கள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரபையில், கல்யாண சுந்தரர் – மனோன்மணி தாயார், திருமண கோலத்தில் எழுந்தருளினர்.
பின், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, விஷேச ஹோமம் நடத்தப்பட்டு, கல்யாண சுந்தரருக்கு, பூணுால் அணிவித்து, வெண்பட்டு வஸ்திரம், அங்க வஸ்திரம் சாத்தப்பட்டது.
அப்போது, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஒற்றீசா, தியாகேசா’ என விண்ணதிர முழங்கினர். திருமணம் நடந்தேறிய மகிழ்ச்சியில் சாக்லெட், இனிப்புகள் பரிமாறி கொண்டனர்.
பெண்கள், தங்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றி, புது கயிற்றில் மாங்கல்யம் அணிந்துக் கொண்டனர். வேண்டுதலுக்காக, மஞ்சள் கயிறு, கிழங்கு, பால் சங்கு ஆகியவற்றை பக்தர்கள் பிரசாதமாக வழங்கினர்.
நிறைவாக, பால் – பழம் கொடுக்கும் வைபவம் நடந்தேறியது. பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
18 திருநடனம்
சன்னதி தெருவில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு ஏற்பாட்டில், 30,000 க்கும் அதிகமான பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. ஆங்காங்கே, சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், பக்தர்கள், அன்னதானம் வழங்கினர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாலையில், கல்யாண சுந்தரர் உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், ரிஷபாரூடர் உற்சவமும், இரவில், மகிழடி சேவை நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர்.