ரூ.3.66 கோடி நில மோசடி பெண் உட்பட இருவர் கைது
ஆவடி, அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயசந்திரன், 33. ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில், கடந்தாண்டு ஆகஸ்ட் 28ல் அளித்த புகார்:
புதிய இடம் வாங்க விசாரித்தபோது, என் வீட்டின் அருகே குடியிருக்கும் பராக்சூடா வாயிலாக, சுரேந்தர் என்பவர் அறிமுகமானார். அவரிடம் திருமுல்லைவாயல், பாலாஜி நகரில், 7,200 சதுர அடி கொண்ட இடத்திற்கான, பொது அதிகார பத்திரம் இருப்பதாக கூறினார்.
அந்த இடத்திற்கு, 3.66 கோடி ரூபாய் விலைபேசி, அம்பத்துார் சார் பதிவாளர் அலுவகலத்தில், என் தந்தை அருணாச்சலம் பெயரில் பத்திர பதிவு செய்தேன். அங்கு, சுற்றுசுவர் கட்ட சென்றபோது, நிலத்தின் உரிமையாளர் உமையாள் பெயரிலும், அவரது மகள் பவானி பெயரிலும், ஆள்மாறாட்டம் செய்து சுரேந்தர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரித்து, உமையாளின் மகள் பவானியாக நடித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட, கோவை பல்லடத்தை சேர்ந்த பூங்கொடி,53, போலியாக பொது அதிகார பத்திரம் செய்து கொடுத்த சிவகாசி, திருத்தங்கலை சேர்ந்த வைரமுத்து, 52, ஆகிய இருவரையும் போலீசார், கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.