புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், “குடும்ப பிரச்சினை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் உள்ளிட்டோர் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கினர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, அப்போதைய அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், அண்ணாநகர் உதவி போலீஸ் கமிஷனர் குணசேகரன் (இவர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், “இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் குணசேகரன், ஜெகதீசன் ஆகியோர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இதில் ரூ.4 லட்சத்தை போலீஸ் அதிகாரி குணசேகரனிடம் இருந்தும், ரூ.6 லட்சத்தை இன்ஸ்பெக்டர் ஜெகதீசனிடம் இருந்தும் வசூலித்துக்கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ஜெகதீசனை சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிக்கக்கூடாது. போலீசார் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதை கருத்தில் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து போலீசாரும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.