நகரமைப்பு வல்லுனரை தேடுகிறது ‘கும்டா’
சென்னை:சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான கும்டாவில், ஒப்பந்த முறையில் நகரமைப்பு வல்லுனரை நியமிக்கப்பட உள்ளார்.
சென்னையில் பொது போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைக்க, ‘கும்டா எனப்படும் போக்குவரத்து குழுமம், 2010ல் துவங்கப்பட்டது. இருப்பினும், சில ஆண்டுகளாகத்தான் உரிய அதிகாரிகளுடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை பெருநகருக்கான போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டங்களை, இந்த குழுமம் உருவாக்கி வருகிறது. இதில் போக்குவரத்து, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளின் வல்லுனர்கள் உள்ளனர். போக்குவரத்தை பிரதான பாடமாக படித்த நகரமைப்பு வல்லுனர் இல்லை.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வில் இருந்து ஒரு சீப் பிளானர், அயல்பணி அடிப்படையில் கும்டாவுக்கு அனுப்பப்பட்டார். அவர், சில மாதங்கள் முன் ஓய்வு பெற்றுவிட்டார். இதையடுத்து, வேறு ஒரு சீப் பிளானரை, சி.எம்.டி.ஏ., இன்னும் அனுப்பவில்லை.
எனவே, முழுநேர நகரமைப்பு வல்லுனர் ஒருவரை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, கும்டா முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.