மெட்ரோ ரயில் பணிக்கு இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்தும் நோட்டீஸ் ரத்து
சென்னை:மெட்ரோ ரயில் நிலையத்துக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், 2ம் கட்ட பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நுாற்றாண்டு பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோவிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையிலான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், ‘மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்திற்கு மாற்றப்படும்’ என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தாக்கல் செய்த, சாத்தியக்கூறு மாற்று திட்ட பற்றிய அறிக்கையை பதிவு செய்து, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இதைத் தொடர்ந்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின், 837 ச.மீ., பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று தான், 200 கோடி ரூபாய் செலவில் கட்டுமானம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் நடவடிக்கையை அனுமதித்தால், அது தன்னிச்சையானதாக இருக்கும்.
இந்த நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீசை அனுப்பியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக, மெட்ரோ ரயில் நிலைய திட்டம் மாற்றப்படவில்லை. ஸ்ரீ ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோவில் வளாகத்திற்குள் மெட்ரோ நிலையத்தை அமைப்பதன் வாயிலாக, அதன் அசல் திட்டத்தின்படி, மெட்ரோ ரயில் நிர்வாகம் பணியை தொடரலாம்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது.