முறையாக அகற்றப்படாத குப்பை மேடவாக்கத்தில் சுகாதார சீர்கேடு
மேடவாக்கம்:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், தினமும் 10 டன்னிற்கு மேல் குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, இ- – கார்ட் மற்றும் டிராக்டர் வாயிலாக, பள்ளிக்கரணை பின்புறம், ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது.
அதை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தரம் பிரித்த பின், ஆப்பூர் குப்பை கிடங்கிற்கு தினமும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், முறையாக குப்பையை அகற்றுவதில்லை
இதனால், சுற்றியுள்ள பகுதிவாசிகள், அதிகரிக்கும் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.
தினமும் பத்து லாரிகளில் குப்பை எடுத்துச் செல்லப்படுவதாக, ஊராட்சி சார்பில் கூறப்படுகிறது. ஆனால், அங்கு 50 டன்னிற்கு மேல் குப்பை குவிந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து, குப்பையை முறையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.