பெண்ணின் வளர்ப்பு நாய் மாயம் கருத்தடை மையத்தில் தகராறு
தி.நகர்:கருத்தடைக்காக பிடித்துச் சென்ற தன் வளர்ப்புநாயை மீண்டும் ஒப்படைக்காததால், நாய்கள் கருத்தடை மையத்திற்கு சென்று, மருத்துவர்களுடன் பெண் வாக்குவாதம் செய்தார்
அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர் வாணி, 45; சமூக ஆர்வலர். இவர், அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு அளித்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது தெருவில் சுற்றிதிரிந்த ஆறு நாய்களை, இன கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, மாநகராட்சியினர், தி.நகர் கண்ணம்மாபேட்டை நாய்கள் கருத்தடை மையத்திற்கு பிடித்துச் சென்றனர்.
இதில், வாணியின் வளர்ப்பு நாயையும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். பல நாட்கள் ஆகியும் நாயை திருப்பி, அதே பகுதியில் கொண்டு வந்து விடவில்லை.
நேற்று மாலை வாணி, தி.நகர் கண்ணம்மாபேட்டையில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்திற்கு சென்றார். தன் வளர்ப்பு நாயை கேட்டு, மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
தன் வீட்டில் புகுந்து, வலுக்கட்டாயமாக வளர்ப்பு நாயை பிடித்து சென்றதாக வாணி குற்றம் சாட்டினார். ‘நாயை ஒப்படைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.