10 ஆண்டுகளாக துாய்மை பணி 17 குடும்பத்திற்கு நிரந்தர வேலை
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, 17 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கூடாரம் அமைத்து குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் குப்பையில் கிடைக்கும் பிளாஸ்டிக், இரும்பு, அட்டைபெட்டிகள், ஒட்டாங்குச்சி உள்ளிட்டவற்றை தரம் பிரித்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் ‘ராம்கி’ நிறுவன அதிகாரிகள் மற்றும் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி கட்டா தேஜா, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, திருவொற்றியூர் மண்டல அதிகாரி விஜய்பாபு ஆகியோர், 17 குடும்பத்தினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு ராம்கி நிறுவனத்தில் 20,000 ரூபாய் சம்பளத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கினர்.
நேற்று ராம்கி நிறுவன அதிகாரிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்த்து வேலைக்கான மனுக்களை பதிவு செய்தனர். மேலும், ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள இளைஞர்களுக்கு, மாநகராட்சி வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி வழங்குவதாக உறுதியளித்தனர்.
மேலும் நவீன மருத்துவ வாகனம் மூலம் பெண்கள், முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தி, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.