ஈஷா தமிழ் தெம்பு திருவிழாவில் பறையிசை போட்டிக்கு கவுரவம்
கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதி பறையிசைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன.
கோவை ஈஷா யோகா மையத்தில், தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில், ‘தமிழ்த் தெம்பு — தமிழ் மண் திருவிழா’ என்ற விழா, பிப்ரவரி 27 ல் துவங்கி, மார்ச் 9 வரை நடந்தது.
இதில், தமிழ் பண்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிலம்பம், கவிதை, கட்டுரை, ஓவியம், கோலம் மற்றும் பறையிசை போட்டிகள் நடந்தன.
குறிப்பாக மார்ச் 8-ல், ஈஷா யோகா மைய நிர்வாகி சத்குரு முன் நடந்த பறையிசை போட்டி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பறையிசை போட்டியில் முதல் இடத்தை, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி குழு, இரண்டாம் இடத்தை திருப்பூரை சேர்ந்த மின்னல் கிராமிய கலைக்குழு, மூன்றாம் இடத்தை கரூரை சேர்ந்த சிவசக்தி நாட்டுப்புற கலைக் குழுவும் வென்றன.
இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த குழுக்களுக்கு முறையே, 33,000, 22,000, 11,000 ரூபாய் பரிசுத் தொகைகள், பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் விழாவில் வழங்கப்பட்டன.
பறை இசை போட்டியில் நடுவர்களாக, முன்னோடி பறை இசை கலைஞர்கள் பனையூர் ராஜா, செல்வராணி, மின்னல் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நடுவர்களில் ஒருவரான பனையூர் ராஜா கூறுகையில், ”ஈஷா யோக மையம் பறை இசைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முக்கியத்துவம் அளித்து போட்டிகளை நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது,” என்றார்.