பள்ளி, கல்லுாரி அருகே பெட்டி கடைகள் …அகற்றம் : போதைப் பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை
சென்னை:பள்ளி, கல்லுாரி அருகே உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி, மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த பெட்டிக்கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அதிரடியாக அகற்றினர்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில், 417 தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை செயல்பட்டு வருகின்றன. அதேபோல், 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.
பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள், போதை வஸ்துகளை அதிகம் பயன்படுத்துவதாக, பல்வேறு கூட்டங்களில் ஆசிரியர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
குறிப்பாக, மாநகராட்சி மேயர் பிரியா நடத்திய கூட்டங்கள், உணவு பாதுகாப்பு துறை நடத்திய விழிப்புணர்வு கூட்டங்களில், ஏராளமான புகார் வந்தன.
கூட்டங்களில், ‘பள்ளி, கல்லுாரிகளில் மாணவ – மாணவியருக்கு எளிதாக போதை பொருட்கள் கிடைக்கின்றன. ஆண் நண்பர்கள் வாயிலாக, மாணவியரும் போதை பழக்கத்திற்கு அடிமையாவது தொடர்ந்து வருகிறது’ என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
அவ்வப்போது, உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, கல்வி துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்தாலும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் அதிகளவில் போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதற்கு, அருகே உள்ள பெட்டிக்கடைகள் தான் முக்கிய காரணம் என, மாநகராட்சிக்கு, போலீசார் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவின்படி, நடைபாதையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பெட்டிக்கடைகள், பழைய வாகனங்கள் ஆகியவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
அதன்படி, தேனாம்பேட்டை மண்டலம் கே.பி.தாசன் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த சாப்பாடு கடை, ஜூஸ்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட எட்டு கடைகள் அகற்றப்பட்டன.
கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டு கே.கே.நகரில் காமராஜர் சாலை நடைபாதையில், மணல் மற்றும் செங்கல் விற்பனை நடந்து வந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அங்கிருந்த, செங்கல், மணல் விற்பனைக் கடைகள் உட்பட, 15 ஆக்கிரமிப்பு கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து பழுதடைந்த இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.
பெருங்குடி அண்ணா நெடுஞ்சாலை, மடிப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் உள்ள நடைபாதை கடைகளையும், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
இதுபோன்று, சென்னை மாநகராட்சி முழுதும் உள்ள, பள்ளி, கல்லுாரி அருகாமையில் ஆக்கிரமிப்பு கடைகள், பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் நடைபாதையில் இயங்கி வரும் கடைகளில் தான், அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவற்றால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதாகவும், அவர்கள் எச்சரித்தனர்.
அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாநகராட்சி முழுதும் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முடியாத சூழல் உள்ளது.
அதேநேரம், பள்ளி, கல்லுாரி அருகே உள்ள கடைகளை முதற்கட்டமாக அகற்றப்பட்டு வருகிறது.
இதுபோன்று விற்பனை அனைத்து இடங்களிலும் இல்லை. சில இடங்களில், உணவு பொருட்கள் மட்டுமே விற்றாலும், நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இவற்றால், மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதுடன், விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.
எனவேதான், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், வாகனங்கள் என, அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகர காவல் துறையில், ஏ.என்.ஐ.யு., எனப்படும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அம்பத்துார் பகுதியில் உள்ள, மென்பொருள் நிறுவன ஊழியர்கள், மெத் ஆம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.சமீபத்தில், இக்கும்பலைச் சேர்ந்த ஆறு பேர், சைதாப்பேட்டையில் சிக்கினர். இரு தினங்களுக்கு முன், ராயப்பேட்டையில் ஐந்து பேர் பிடிபட்டனர். இக்கும்பல் குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மென்பொருள் நிறுவன ஊழியர்கள் போல, மெத் ஆம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்தோர், பொறியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு, கர்நாடக மாநிலம், மங்களூருவில் செயல்படும் கும்பலிடம் இருந்துதான், மெத் ஆம்பெட்டமைன் வருகிறது. மங்களூரு கும்பல், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மருத்துவம், பொறியியல் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, கிராம், 3,500 ரூபாய்க்கு மெத்ஆம்பெட்டமைன் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.