புற்றீசலாய் முளைக்கும் ராட்சத பேனர்கள் : ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து அபாயம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், அடுத்தடுத்து புற்றீசலாய் முளைக்கும் ராட்சத விளம்பன பேனர்களால், விபத்து அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரையிலான 30 கி.மீ., நீள சாலை, சென்னையின் நுழைவுவாயிலாக உள்ளது. இந்த சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.

இச்சாலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலுார் உயிரியல் பூங்கா, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள கட்டடங்கள் மேல், பல டன் எடையுள்ள, 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்ப பேனர்களால், கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்களோடு மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது. தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் மாதம்தோறும் நடக்கிறது.

காற்று பலமாக வீசும்போதும், ஸ்திரத்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த ராட்ஷத விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

பள்ளி மற்றும் கல்லுாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நொறுக்கு தீனி உற்பத்தியாளர்கள், மருத்துவ மனைகள், காப்பீடு நிறுவனங்கள், ஐஸ் கிரீம் நிறுவனங்கள் என, செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் இரு புறமும் 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மேற்கண்ட விளம்பரங்களால் ஈர்க்கப்படுகின்றனர். விளம்பர பேனர்களை பார்த்தபடியே வாகனத்தை இயக்குவதால், முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதுவதும், பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகளால், தினமும் பத்து இடங்களிலாவது கைகலப்பு, வாய்த்தகராறு நிகழ்கிறது. தவிர, சிறு சிறு விபத்துகளும் தாராளமாய் நடக்கின்றன. மேலும், பெரும் விபத்தில் சிக்கி, உயிர் பலியும் மாதம் தோறும் நிகழ்கிறது.

எனவே, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பேனர்களை அகற்ற காவல்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *