பிபி பிரச்னையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம்: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேச்சு
சென்னை: உயர் ரத்த அழுத்த பிரச்னை (பிபி) அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த உடனடியான நடவடிக்கைகள் அவசியம் என அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.
இந்தியாவில் முதன்முறையாக, சென்னையில் 6வது உலக உயர் ரத்த அழுத்த மாநாடு 2025 நேற்று நடந்தது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதாவது: உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த உடனடியான நடவடிக்கைகள் மிக மிக அவசியம். “இந்தியா உடல்நலம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் நேர்மறையான மாற்றங்களை எதிர்கொள்வதில் முக்கிய இடத்தில் இருக்கிறது. ஒருவருக்கு உடல்நிலையில் கோளாறு வந்த பிறகு அதற்கான சிகிச்சை அளிப்பதையும், மருத்துவ பராமரிப்பை கொடுப்பதையும் விட, உடல்நல கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிவதை ஒரு விதிமுறையாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவில் வாழ்க்கை முறை நோய்களைக் கையாள்வதற்கான ஒரு வரைபடம் போல் தீர்வுகளை வழங்கி வருகிறது. விழிப்புணர்வு, வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு மூலம் நம்மால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் பல உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பதற்கு இது சான்றாகவும் அமைந்திருக்கிறது. இந்த மாநாடு ஒரு பெரும் மாற்றத்திற்கான ஒரு உந்துசக்தியாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் இனி நமக்கே தெரியாமல் பாதிக்கும் அச்சுறுத்தலாக இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, உலகின் நிபுணத்துவமிக்க மருத்துவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. புதுமையான கண்டுபிடிப்புகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் இடையேயான கூட்டு செயல்பாடு மற்றும் முன்கூட்டியே நோயறிந்து ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு மூலம், நாம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
அப்போலோ மருத்துவமனைகள் நோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை வழங்குவதில் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. 25 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகளிலிருந்து பெறப்பட்டிருக்கும் நுண்ணறிவுகளை பகுப்பாய்வு செய்து பயன்படுத்தும் அப்போலோ ப்ரோஹெல்த் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குவதோடு இங்குள்ள சமூகங்களுக்கு நோயறிந்து தீர்வுகளை வழங்கும் பில்லியன் ஹார்ட்ஸ் பீட்டிங் போன்ற முன்முயற்சிகள் மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ பராமரிப்பை விரிவுபடுத்துவதில் அப்போலோ மருத்துவமனைகள் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன.