தியாகராஜர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயிலில், மாசி பிரமோற்சவ விழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள், ஆராதனை, சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். முக்கிய நிகழ்வாக 7ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன் சந்திரசேகரர் – மனோன்மணி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். காலை வடிவுடையம்மன் கோயில் சன்னதி தெருவில் இருந்து 47 அடி உயரம் கொண்ட தேர், 108 கைலாய வாத்தியத்துடன், சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரதநாட்டியம், 108 சங்க நாதம் முழங்க 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தன
எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், அதிமுக கவுன்சிலர் கே.கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்ற தேர் 4 மாட வீதிகளை சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, திருவொற்றியூர் மண்டலம் சார்பில் ஆம்புலன்ஸ், குடிநீர் மற்றும் மருத்துவ முகாம் போன்ற வசதிகள் செய்யப்பட்டன.
வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில், திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி கமிஷனர் நற்சோனை, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மாசி திருவிழாவின் 9ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதைதொடர்ந்து, 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெற உள்ளது.