காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
எண்ணுார், குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சந்தியா, 32, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட முருகன், கடந்த ஜூன் மாதம் மஞ்சள்காமாலையால் உயிரிழந்தார். சில மாதம் கழித்து, சந்தியாவிற்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில், 2022ம் ஆண்டில் இருந்து, சந்தியாவிற்கு, மணலிபுதுநகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன், 38, என்பவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழகிய நிலையில், மூன்றாவது குழந்தைக்கு கார்த்திகேயன் தான் தந்தை, மாதந்தோறும் குடும்ப செலவிற்கு பணம் தர வேண்டும் எனக் கூறி, நேற்று முன்தினம், எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்துள்ளார்
இது குறித்து, காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நேற்று மாலை விசாரித்துள்ளார்.
இவ்வழக்கில் பெண்ணுக்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில், திடீரென எண்ணுார் காவல் நிலையத்தின் மொட்டை மாடிக்கு சென்று, குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சுதாரித்த போலீசார், அப்பெண்ணை மீட்டு கண்டித்ததுடன், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், காவல் நிலைய வளாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.