பொது – தனியார் பள்ளி மீது அவதுாறு முன்னாள் ஊழியருக்கு ‘காப்பு
பெரம்பூர், பெரம்பூர், துளசிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 51; தனியார் பள்ளி தாளாளர். இவரது பள்ளியில், 2023ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 45, என்பவர், நிர்வாக அதிகாரியாக பணியில் இருந்தார்.
அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், அதே ஆண்டு பணியில் இருந்து அவரை நீக்கியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், பள்ளியின் தாளாளரான சீனிவாசன், கணக்காளர் சுசிலா ஆகியோர் பள்ளியில் ஊழல் செய்வதாக, பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பள்ளி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, செம்பியம் போலீசார் செந்தில்குமாரை அழைத்து விசாரித்து, எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, மீண்டும் மின்னஞ்சல் அனுப்பியதுடன், பள்ளிக்கு நேரில் சென்று மிரட்டியுள்ளார்.
இது குறித்த சீனிவாசன் புகாரையடுத்து, வழக்கு பதிந்த போலீசார், செந்தில்குமாரை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.