திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வெளிநாடு தப்பிய வாலிபர் கைது
வடபழனி, வடபழனியை சேர்ந்தவர், 27 வயது பெண். இவர், 2012 முதல் 2016ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படித்தபோது, அதே கல்லுாரியில் படித்த, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த முகமது, 27 என்பவரை காதலித்தார்.
படிப்பை முடித்த பெண், சென்னையில் உள்ள கால் டாக்சி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். அதே நிறுவனத்தில் முகமதும் பணிக்கு சேர்ந்தார். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் முகமது நெருக்கமாக இருந்துள்ளார்.
பின், 2017 ம் ஆண்டு முகமது வேலைக்காக, மேற்காசிய நாடான ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாய் நகருக்கு சென்றார். பின், 2018 ம் ஆண்டு முகமதுக்கு, அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
இதையறிந்த பெண், முகமதுவின் குடும்பத்தினரை சந்தித்து காதலிப்பது குறித்து தெரிவித்தார். மதம் மாறச் சொல்லி, குரான் படிக்க வைத்ததோடு, நோன்பு இருக்க பழக்கப்படுத்தினர். திருமணத்திற்காக, 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இருந்தும், அப்பெண்ணை திருமணம் செய்யாமல் முகமது ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், 2020 செப்டம்பரில், வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, 2022 ஜூலையில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, முகமது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்ததால், போலீசாரால் தேடப்படுபவர் என்பதற்கான, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்த முகமதை, விமான நிலைய அதிகாரிகள் பிடித்து, வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.