திருவேற்காடு பாரதி நகர் சாலையில் கழிவு நீர் பிரச்னையால் தினசரி அவதி
திருவேற்காடு, கோலடி பிரதான சாலை முதல் தேரடி சாலை வரை, 2 கி.மீ., துாரத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத் துறையால் வடிகால் கட்டப்பட்டது.
இந்த கால்வாய் சுற்றுவட்டத்தில், கோலடி பிரதான சாலை, கே.என்.வி., நகர், பாரதி நகர் பிரதான சாலை மற்றும் பாரதி நகர் விரிவாக்கம் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேற்கூறிய நெடுஞ்சாலைத் துறை வடிகாலில் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, கால்வாயில் குப்பை கழிவு மற்றும் மண்ணால் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் நிரம்பி வழிகிறது. பாரதி நகர் பிரதான சாலையில் உள்ள பழைய தரைப்பாலம், கசடுகளால் சேதமடைந்துள்ளது.
இதில் வெளியேறும் கழிவுநீர், பாரதி நகர் மற்றும் பாரதி நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள சாலை மற்றும் வீடுகளை சுற்றி வழிந்து ஓடுகிறது.
இதனால், இரவு வேளைகளில் கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாரதி நகர் பிரதான சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி இருப்பதால், மாணவ – மாணவியர் தினமும் கழிவு நீரில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளும் பிரச்னைக்கு தீர்வு காணாமல், மவுனமாக உள்ளனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட பழைய வடிகாலை அகற்றி, மழைக்கு முன் புது வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள், பிரச்னையின் தீவிரத்தை எடுத்து கூறி, நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இல்லையெனில், மழைக்காலத்தில் வீடுகளில் கழிவு நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்படுவர். அதேபோல், பாரதி நகர் பிரதான சாலையில், புதிதாக தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவேற்காடு