இண்டிகோ விமானத்தில் கோளாறு ஓடுதளத்தில் உராய்ந்த வால்பகுதி
சென்னை, மும்பையில் இருந்து சென்னைக்கு 186 பயணியருடன் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1:47 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது
அப்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி உராய்ந்த படி சென்றது. இதனால் தீப்பொறி ஏற்பட்டது. உள்ளே இருந்த பயணியர் அனைவரும் அச்சமடைந்தனர்.
சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியால் விமானம் அதிக சேதமின்றி குறிப்பிட்ட இடத்தில் நின்றது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 186 பயணியர், 8 விமான ஊழியர்கள் உட்பட 194 பேர் உயிர் தப்பினர்.
இந்த தகவல் வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது. இந்நிலையில் டில்லியில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துக்கு பயணியர் வாயிலாக புகார் சென்றது. இது குறித்து அவர்கள் முழு விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், சேதமடைந்த விமானத்தை முழுமையாக சீரமைத்து, தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்பே, அந்த விமானத்தை மீண்டும் பயணிகள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.