கோவூரில் தேர் வெள்ளோட்டம்
குன்றத்துார் அருகே கோவூரில், பழமை வாய்ந்த சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் இக்கோவில் புதன் தலமாக இருப்பதால், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் ஏராளமானோர் இங்கு வழிபடுகின்றனர்.
வைகாசி விசாக 10 நாள் விழாவில், ஏழாம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடந்து வந்தது. தேர் பழுதானதால், 1984ம் ஆண்டிலிருந்து தேர் திருவிழா நடக்கவில்லை.
மொத்தம் ஒரு கோடி ரூபாயில், 42.5 அடி உயரம், 16 அடி அகலத்தில், ஐந்து அடுக்கு கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவடைந்ததால், நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர் வெள்ளோட்டம் நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து, தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.
பகல் 2:00 மணி அளவில், தேர் மீண்டும் நிலையத்தை சென்றடைந்தது. விழாவில், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுந்தரேஸ்வரரை வழிப்பட்டனர்.