மொபைல் சர்வீஸ் மது விற்பனை தாராளம்; 24 மணி நேரமும் கிடைப்பதால் அபாயம்

சென்னை; ‘டாஸ்மாக்’ மூலம் தமிழக அரசே மது வகைகளை விற்பனை செய்கிறது. பகல் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்கப்படுகிறது.

இதன்பின், மதுக்கூடங்களில் நள்ளிரவு 12:00 மணி வரை கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின்பாலம் உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில், அறிமுகமானவர்கள் போனில் தொடர்பு கொண்டால், மது வகைகள் வீடு தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இதற்கு பாட்டிலுக்கு 100 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

இதுபோன்ற மொபைல் போன் சர்வீஸ் விற்பனை, அம்பத்துார், செங்குன்றம், சோழவரம், மாதவரம் பால்பண்ணை, ஆவடி டேங்க் பேக்டரி மற்றும் புழல் காவல் நிலைய எல்லை சுற்றுவட்டாரங்களிலும் அதிகரித்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மது வகைகள் மட்டுமின்றி குட்கா, மாவா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களும் சர்வசாதாரணமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி போலீசில் சிக்கினால், 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பதால், மொபைல் சர்வீஸ் சரக்கு விற்பனையை நாடுகின்றனர்.

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், காசுக்காக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், இரவில் சாலையில் பயணிக்க முடியாமல், வடசென்னை வாசிகள் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

மாமூல் மழையில் போலீசார்

போதை பொருள் விற்பனையை உள்ளூர் போலீசாரும், மது விலக்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை. தங்களிடம் சிக்கும் வியாபாரிகளிடம், வேண்டியதை கறந்து கொண்டு அனுப்பி விடுகின்றனர். மாமூல் போலீசாரால் தான், கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை கூட தாராளமாக நடக்கிறது. இதனால் அதிகரிக்கும் வியாபார போட்டியால், வியாபாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *