சமையல் உதவியாளர் கொலை: வாலிபர் கைது
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை, இளைய முதலி தெருவில், கடந்த 5ம் தேதி, பி.பி.சி.எல்., நிறுவன மதில்சுவர் நடைமேடை அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், துணியால் வாய் கட்டப்பட்டு தலைகுப்புற நிலையில் இருந்தது. அவரது உடல் மீது ரப்பீஸ் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தண்டையார்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொருக்குப்பேட்டை போலீசாரின் விசாரணையில், கொல்லப்பட்டது வண்ணாரப்பேட்டை, தோப்பு தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி – பாக்யலட்சுமி தம்பதி மகன் சதீஷ்குமார், 25, என்பதும், கேட்டரிங்கில் சமையல் உதவியாளராக வேலை செய்வதும் தெரிந்தது.
கடந்த 2ம் தேதி, திருச்சி, சமயபுரம் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்ற சதீஷ்குமார், நான்கு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்த சென்றபோது மகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், கொருக்குப்பேட்டை, தியாகப்பா தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார், 25, கூட்டாளிகளுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. நேற்று போலீசார் அவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.