டூ – வீலர்’ திருட்டில் ஈடுபட்ட காயலான் கடைக்காரர் சிக்கினார்
தாம்பரம், பெருங்களத்துார் அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் சகாரியா. இவர், டிசம்பர் மாதம் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருட்டு போனது தெரிய வந்தது.
தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி, திருநெல்வேலியை சேர்ந்த மாரிராஜ் என்கிற மாரி, 32, என்பவரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் தங்கி, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இருசக்கர வாகனங்களை திருடி, பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில், ஒரு வாகனம் 20,000 ரூபாய் என்ற அடிப்படையில் கழிவுக்கு விற்பனை செய்துள்ளார். நன்றாக இருக்கும் வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.