நுாறடி சாலையை தரை வாடகைக்கு விட்ட போலீஸ் போக்குவரத்து நெரிசல்; தொடரும் விபத்துகள்
சென்னை நுாறடிச்சாலையை சாலையோர வியாபாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் தரை வாடகைக்கு விட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் அதிகரித்து வருகிறது
கிண்டி கத்திப்பாரா – மாதவரம் ரவுன்டானா இடையிலான சாலை, 21 கி.மீ., துாரம் உடையது. இவ்வழியாக தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், மாநகர பேருந்துகள், கார்கள், டூ – வீலர்கள் சென்று வருகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையம் முதல், கிண்டி கத்திப்பாரா வரை, மெட்ரோ ரயில் மேம்பால துாண்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடந்து வருகிறது.
கோயம்பேடு கூவம் ஆற்று பாலத்திற்கு அருகே, பூமிக்கடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, திருமங்கலம் வழியாக செல்கிறது.
திருமங்கலம், பாடி மேம்பாலங்களுக்கு இடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் துாண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பாடியில் இருந்து ரெட்டேரிக்கு செல்லும் வழியில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக, ஆங்காங்கே சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால், 100 அடி சாலை குறுகியுள்ளது. வடகிழக்கு மழையால் சேதமான சாலையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இன்னும் முழுமையாக சீரமைக்காததால் வாகனங்கள் தள்ளாடியபடியே பயணித்து வருகின்றன.
இந்நிலையில், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், பாடி, தாதங்குப்பம், செந்தில்நகர், ரெட்டேரி ஆகிய இடங்களில் சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இங்கு, தள்ளுவண்டி உணவு கடைகள், வாகனங்களில் பிரியாணி, மீன் உணவு கடைகள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் கடைகள் புற்றீசல் போல முளைத்துள்ளன.
நடைபாதையை ஆக்கிரமித்து செருப்பு, ஷூ, துணி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. செந்தில்நகர் அருகே, பழ ஜூஸ் கடைகள், பொம்மை கடைகள், பர்னீச்சர் விற்பனை கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன.
ஏற்கனவே குறுகலாக உள்ள இச்சாலையின் இரண்டு புறங்களிலும் நடைபாதை தள்ளுவண்டி மற்றும் வாகனங்களை நிறுத்தி விற்பனை நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் கண்டும், காணாமலும் இருந்து வருகின்றனர்.
போக்குவரத்து அபராதம் விதிப்பு நடைமுறை ஆன்லைனுக்கு மாறியுள்ளதால், வருமானத்திற்காக சாலையோர கடைகளை தரைவாடகைக்கு போக்குவரத்து போலீசார் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு கடைகளுக்கும் தகுந்தபடி தினமும் 200 முதல் 500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி ரெட்டேரி முதல் தாதங்குப்பம் ரயில்வே மேம்பாலத்திற்கு முன் வரை, இச்சாலையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை கடைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன.
இங்கு, கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து, விற்பனை மையங்களில் நிறுத்தப்படுவதைபோல், கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கும், மாத தவணையில் போலீசார் வசூல் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
போலீசாரின் வசூல் நடவடிக்கையால், விபத்து மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகரித்து உள்ளது. இதன் பின்னனியில், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆளும்கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர்.
இவர்களின் பரிந்துரைப்படி, சாலையோர காலி இடங்கள், நடைபாதைகள் தரைவாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.