பிர்லா கோளரங்கில் அறிவியல் அணுகல் கூடம் பார்வையற்ற மாணவர்களுக்காக திறப்பு
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், கற்றலில் அணுகல் ஆராய்ச்சி மையம், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையமும் இணைந்து, மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் போட்டியை நேற்று நடத்தின.
போட்டியை துவக்கி வைத்த, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியதாவது:
ஐ.ஐ.டி.,யும், அறிவியல் தொழில்நுட்ப மையமும், மாணவர்களுக்கான சிறந்த கல்விக்கான வழிகாட்டி போட்டியை நடத்தி வருகின்றன.
இந்த போட்டி வாயிலாக, இளம் மாணவர்களின் பல்வேறு திறன்கள் மேம்படும். மேலும், அறிவியல், கணிதத்தில் உள்ள கடினமாக பயிற்சிகளை எளிய முறையில் அறிந்து, மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துவக்க விழாவில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் லெனின் தமிழ்கோவன், ஐ.ஐ.டி., பேராசிரியர் ஹேமச்சந்திரன் கரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான அறிவியல் அணுகல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூடத்தை, காமகோடி திறந்து வைத்தார். பார்வையற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ – மாணவியர், பல்வேறு வகையான பாறைகளை தொட்டும், கேட்டும் மகிழ்ந்தனர்.