சிறுபாலம் கட்டுவதில் அலட்சியம் காட்டும் ரயில்வே ரூ.7.20 கோடி கட்டியும் 2 ஆண்டுகளாக மெத்தனம்
குரோம்பேட்டை, மழை காலத்தில், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜி.எஸ்.டி., – ரயில்வே லைனை கடந்து செல்லும்.
பின், சிட்லப்பாக்கம், நெமிலிச்சேரி, பல்லாவரம் ஏரிகளுக்கு செல்லும் வகையில், சானடோரியம் ஆஞ்சநேயர் கோவில், வெற்றி தியேட்டர், பான்ட்ஸ் சிக்னல் ஆகிய இடங்களில், சாலை மற்றும் தண்டவாளத்தின் கீழ், கால்வாய்கள் கட்டப்பட்டன.
பராமரிக்கவில்லை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கால்வாய்கள் வழியாக, ஒவ்வொரு மழையின் போதும், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், அந்தந்த ஏரிகளுக்கு செல்லும்.
காலப்போக்கில், இக்கால்வாய்களை நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையினர் முறையாக பராமரிக்கவில்லை.
மற்றொரு புறம், குடியிருப்புகளின் பெருக்கம் மற்றும் அதிக மழைப் பொழிவால், கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில், மழைநீரின் அளவுக்கு ஏற்ப கால்வாய்கள் இல்லாததால், தண்ணீர் பின்நோக்கி வந்து, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் குடியிருப்புகளை சூழ ஆரம்பித்தது.
தொடர் வெள்ள பாதிப்புக்கு பின், இக்கால்வாய்களை துார்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ரூபாய் 7.20 கோடி
ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கால்வாய்களை நெடுஞ்சாலைத் துறையினர் துார்வாரினர். வெற்றி தியேட்டர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே செல்லும் கால்வாயை, நெடுஞ்சாலைத் துறையினர் அகலப்படுத்தினர்.
நெடுஞ்சாலைத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், தண்டவாளத்தின் கீழ் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை கட்டினால் மட்டுமே, மழைநீர் தடையின்றி அருகேயுள்ள ஏரிகளுக்கு செல்லும்.
குரோம்பேட்டை, பல்லாவரத்தில் ரயில்வே லைனுக்கு கீழ் செல்லும் சிறுபாலத்தை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை சார்பில், 7.20 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பணம் கட்டி, 2 ஆண்டுகள் ஆகியும், அந்த சிறுபாலங்களை அகலப்படுத்த ரயில்வே நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, இத்தகவல் தெரியவந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், வரும் மழைக்கு மீண்டும் இப்பகுதிகளில் வெள்ளம் தேங்கும். அதனால், இந்தாண்டு பருவமழைக்கு முன்னராவது, சிறுபாலங்களை அகலப்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
– நெடுஞ்சாலைத் துறையினர்.