37 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது
செங்குன்றம், செங்குன்றம், புழல், சோழவரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதுகுறித்து போலீசாரும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு மற்றும் கடத்தல் தடுப்பு போலீசாரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, செங்குன்றம் அருகே பாடியநல்லுாரில், சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு மற்றும் கடத்தல் தடுப்பு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, லாரியில் ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட, 37 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, சந்தோஷ்குமார், 38, மாதவன், 47, லாரி டிரைவர் மணிகண்டன், 50, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.