மெப்ஸ் ‘ சிக்னலில் நகரும் படிகளை அகற்றி ஜி.எஸ்.டி., சாலையை அகலப்படுத்த முடிவு

தாம்பரம் :தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.

இவர்களில், 30 சதவீதம் பேர், அந்தந்த நிறுவன பேருந்துகளிலும், மற்றவர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் வாயிலாகவும் பணிக்கு வந்து செல்கின்றனர். இதனால், அந்த சிக்னலில் ‘பீக் ஹவர்ஸ்’ சமயத்தில் கடும் நெரிசல் காணப்படுகிறது.

இந்த சிக்னலில், ஜி.எஸ்.டி., சாலையின் இடதுபுறத்தில் சாய்தள நடைபாதை, நகரும் படிகள் மற்றும் சாலையின் வலதுபுறத்தில், நகரும்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மெப்ஸ் வளாகத்திற்குள் இருந்து வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்ல இடதுபுறம் திரும்பும் இடத்தில், சாய்தள நடைபாதை உள்ளதால், வாகனங்கள் எளிதாக திரும்ப முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வாக, சாய்தள நடைபாதையை அகற்றி, சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாற்று நடவடிக்கையாக, 2 கோடி ரூபாய் செலவில், புதிதாக நகரும் படிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இப்பணி துவங்கும் என, தெரிகிறது.

ரூ.14 லட்சம்

சானடோரியம் மெப்ஸ் சிக்னலில், ஏற்கனவே சாலையின் வலது – இடது புறத்தில் நகரும் படிக்கட்டு பயன்பாட்டில் உள்ளது. அவை, பல மாதங்களாக பழுதாகி இயங்கவில்லை.இது குறித்து, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியும் பழுது சரிசெய்யப்படவில்லை.இது குறித்து விசாரித்ததில், இந்த இரண்டு நகரும் படிக்கட்டுகளையும் சீரமைக்க, 14 – 16 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், அவை அமைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், அவ்வளவு பணத்தை செலவு செய்து சீரமைத்தால், மீண்டும் பழுதாக வாய்ப்புள்ளது.அதனால், பழைய நகரும் படிக்கட்டுகளை அகற்றி, புதிய நகரும் படிக்கட்டு அமைக்க, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *