கடற்கரை – எழும்பூர் 4வது பாதையில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை, சென்னை எழும்பூர் – – கடற்கரை இடையே 4 கி.மீ., துாரத்திற்கு நான்காவது புதிய ரயில் பாதை பணி, 274.20 கோடி ரூபாய் மதிப்பில் 2023, ஆக., மாதம் துவங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததால், பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

நிலம் கையகப்படுத்திய பின், ரயில் பாதை, சிக்னல் அமைப்பு மற்றும் மின் சாதனங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்தன.

இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் வரை நான்காவது பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும் மேல்நிலை மின் கம்பிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடற்கரை — எழும்பூர் இடையே நான்காவது பாதையில், ரயில் இன்ஜின் இயக்கி, சோதனை ஓட்டம் நடந்தது.

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ்குமார் கூறியதாவது:

கடற்கரை – எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்ததும், எழும்பூரில் இருந்து கடற்கரை வழியாக வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள், அதிக அளவில் இயக்கப்படும்.

சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு, அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில், எழும்பூரில் இருந்தும் வட மாநில ரயில்கள் அதிக அளவில் இயக்க, இந்த பாதை பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, வரும் 9ம் தேதி, புதிய ரயில் பாதையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அவரது ஆலோசனை மற்றும் ஒப்புதலுக்கு பின், இம்மாதம் இறுதிக்குள் இந்த புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மின்சார ரயில்கள் ரத்தால் பயணியர் கடும் அவதி

எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதனால், மதியம் வரையில் கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன.பெரும்பாலான ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாததால், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், ஒரு மணி நேரமாக காத்திருந்து, பயணியர் அவதிப்பட்டனர்.பயணியர் சிலர் கூறியதாவது:பயணியர் நலனை கருதி, விரைவு பாதை வழியாக மின்சார ரயில் சிறப்பு ரயில்களை இயக்கி இருந்தால், பயணியர் நீண்ட நேரம் காத்திருந்து அவதி அடைந்திருக்கமாட்டார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எழும்பூர் யார்டில் உள்ள ரயில் பாதையில், இன்று இரவு மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், கடற்கரை – தாம்பரம் இரவு 7:30, இரவு 8:55, 10:20, 11:59 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கூடுவாஞ்சேரி – கடற்கரை இரவு 10:40, 11:15 மணி ரயில்கள்; செங்கல்பட்டு – கடற்கரை இரவு 10:10, 11:00 மணி ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *