நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் இடித்து அகற்றம்
கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், 132வது வார்டில், கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் மற்றும் ஸ்டேஷன் வியூ சாலைகள் உள்ளன.
இச்சாலைகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், சில ஹோட்டல்கள் நடைபாதை வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன.
அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள், நடைபாதையிலேயே சமைத்ததால், பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், ரயில்வே பார்டர், ஸ்டேஷன் வியூ, யுனைடெட் இந்தியா காலனி முதல் பிரதான சாலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், நேற்று மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நடைபாதையில் கட்டப்பட்ட படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. மேலும், 55 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
அதேபோல், 138வது வார்டு அசோக் நகர், அசோக் பில்லர் சாலை முதல் 60 அடி சாலை வரை உள்ள, 30க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.