கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்திற்கு நிலம்: கலெக்டரின் அறிவிப்பு ரத்து

சென்னை, சென்னை மாநகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில், புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிலையம், 2023 டிச., 30ல் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தினசரி 65,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை, இந்த பேருந்து முனையத்துக்கு வந்து செல்கின்றனர்.

ரூ.74.50 கோடி

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில், 74.50 கோடி ரூபாயில், நடைமேம்பாலம் அமைக்கும் பணியை, சி.எம்.டி.ஏ., – போக்குவரத்து குழுமமான ‘கும்டா’ இணைந்து மேற்கொண்டன.

கடந்தாண்டு, மார்ச் 24ல், இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

நடை மேம்பால பணிக்காக, அப்பகுதியில் ஒரு ஏக்கர், 45 செண்ட் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, கடந்தாண்டு ஜனவரி 6ல், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஆட்சேபங்களும் கோரப்பட்டன.

ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடியும் முன், பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுகிறது என, ஜூன்.,17ல் கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

வழக்கு

இந்த அறிவிப்பை எதிர்த்து, ‘பிரீமியம் லெதர் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவன உரிமையாளர்களான தி.மு.க., – எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் ஜே.ஸ்ரீனிஷா,ஜெ.ஜெ.சுந்தீப் ஆனந்த் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார்.

அரசிதழில் வெளியீடு

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சட்டப்படி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, முதல் அறிவிப்பை தமிழக அரசு, அரசிதழில் தான் வெளியிட வேண்டும். ஆனால், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், மாவட்ட அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் ஆட்சேபங்களை கேட்ட மாவட்ட கலெக்டரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவை என்று அறிவிக்க முடியாது.

நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான உரிமை சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

எனவே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மாவட்ட கலெக்டரின் இரு அறிவிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. சட்ட விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *