மலை போல் தேங்கியுள்ள குப்பையால் நாறுது கோவில் நகரமான திருநீர்மலை

குரோம்பேட்டைதாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மல் விஸ்வேசபுரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. மண்டலம் – 1 மற்றும் 2ல் உள்ள 28 வார்டுகளில், தினசரி சேகரிக்கப்படும், 150 டன் குப்பை இங்கு கொட்டப்படுகிறது.

இந்த கிடங்கு, ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பதால், தொடர்ந்து கொட்ட இடமில்லாமல், மலை போல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

விஸ்வேசபுரத்தில் தேங்கியுள்ள குப்பை, தினசரி, லாரிகள் வாயிலாக ஆப்பூருக்கு எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

அப்படியிருந்தும், குப்பை குறையவே இல்லை. நேற்றைய நிலவரப்படி, அங்கு, 1,000 லோடுக்கும் அதிகமான குப்பை தேங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆப்பூருக்கு குப்பை எடுத்து செல்லப்படுவதாக அதிகாரிகள் கூறும் நிலையில், கொஞ்சம் கூட குறையாதது, பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இவ்விஷயத்தில் தில்லுமுல்லு நடக்கிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

மற்றொரு புறம், குப்பை கிடங்கில் இருந்து, சில மீட்டர் துாரத்தில் உள்ள திருநீர்மலையில், ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

பல்லாவரம், பம்மல், பொழிச்சலுார், கவுல்பஜார், குன்றத்துார், அனகாபுத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, இக்கோவிலுக்கு குப்பை கிடங்கு வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.

அந்த வழியாக செல்லும் போது, சாலை வரை தேங்கியுள்ள குப்பையிலிருந்து வெளிப்படும் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி, குப்பை கிடங்கில் உற்பத்தியாகும் கொசு, ஈ தொல்லையும் கோவில் வரை நீடிக்கிறது. இதனால், பக்தர்கள் மட்டுமின்றி கோவிலை சுற்றி வசிக்கும் மக்களும், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலை நீடித்தால், சாலை வரை குப்பை தேங்கி, இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *