அண்ணா சாலையில் ஹோட்டல்கள், திடீர் கடைகள் இரவு நேரத்திலும் நெரிசல் , விபத்து அபாயம்
சென்னை, அண்ணாசாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. பல்வேறு பிரதான சாலைகள் இணைவதால், எந்நேரமும் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நெரிசல் காரணமாக, கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட துாரமான பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைவலி
அதேநேரம், அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக ஹோட்டல்கள் அமைந்துள்ளன. இவை பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
உணவு பிரியர்களை கவரும் வகையில், புதிது புதிதாக சைவ, அசைவ ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஒருசில ஹோட்டல்களை தவிர, பெரும்பாலான ஹோட்டல்களுக்கு வாகன நிறுத்தம் இல்லை. குறிப்பாக, எல்.ஐ.சி., முதல் தர்கா வரையிலான, 150 மீட்டருக்குள், 15 ஹோட்டல்கள் உள்ளன.
பொதுவாக, 60 – 80 இருக்கைகள் கொண்ட உயர்தர ஹோட்டல்களில், 16 கார்கள், 20 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கென இடம் இருக்க வேண்டும்.
அதேபோல ‘பட்ஜெட்’ ஹோட்டல்களில் எட்டு கார்கள், 40 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி இயங்கும் ஹோட்டல்களுக்கு மட்டுமே, அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், அண்ணாசாலையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள், வாகன நிறுத்தமே இன்றி செயல்பட்டு வருகின்றன.
தீர்வு கிடைக்கும்
இது ஒருபுறம் இருக்க, அண்ணா சாலையில் தற்போது புதிதாக 26 ஹோட்டல்கள், சாலையை ஆக்கிரமிக்கும் நடமாடும் கடைகள், மாலை முதல் விடிய விடிய செயல்பட்டு வருகின்றன.
அவற்றிற்கு வருவோர், தங்கள் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் கண்டமேனிக்கு சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், இரவு வேளைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு, தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:
அண்ணா சாலையை பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்ல பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளோம். இருப்பினும் ஆளுங்கட்சி ஆதரவுடன் சாலையை ஆக்கிரமித்து, சிலர் கடைகள் நடத்துகின்றனர்.
சாலையை ஆக்கிரமித்து, வாகனங்களில் வைத்து நடமாடும் கடைகள் நடத்தப்படுகின்றன. போலீசாரை பார்த்தவுடன் சென்றுவிட்டு, மீண்டும் அதே இடத்தில் கடையை போட்டுவிடுகின்றனர்.
ஒன்றும் செய்யமுடியவில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்தால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –