ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டு
சென்னை, மார்ச் 6: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயல்புக்கு மாறாக, இந்தாண்டு வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைச்சுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்ப அலை பாதிப்பை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்ததால் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் மொத்தம் 10 படுக்கைகள் உள்ளன. இதனை தவிர 2 ஐசியூ படுக்கைகள் உள்ளன. இந்த ஹீட் ஸ்ட்ரோக் தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஏசி வசதி, ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்ஸிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள், ஐ.வி ப்ளூட் (IV Fluid) உள்ளிட்ட மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை எந்த ஒரு நபரும் அனுமதிக்கவில்லை, தேவைப்படும் என்றால் படுக்கைகளை அதிகரிப்போம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்