பைக்கை மடக்கிய எஸ்.ஐ.,யின் ‘வாக்கி டாக்கி’ பறிப்பு
திருமங்கலம், வாகன தணிக்கையின் போது, இருசக்கர வாகனத்தை மடக்கிய போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ.,யின் வாக்கி டாக்கியை பறித்து தப்பிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் போக்குவரத்து போலீசில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் செந்தில்குமார், 48. இவர், நேற்று காலை, 11:30 மணியளவில், 100 அடி சாலை, அண்ணா நகர் மேற்கு பஸ் நிலையம் அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன், ஓட்டுநரான போலீஸ்காரர் பாஸ்கரன் உடனிருந்தார்.
இருவரும், அவ்வழியாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில், திருமங்கலத்தில் இருந்து, பாடியை நோக்கி, ‘ஹெல்மெட்’ அணியாமல், இருவர், ‘ஹீரோ ஸ்ப்ளெண்டர்’ இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தனர்.
அந்த வாகனத்தை, செந்தில்குமார் இடது கைகாட்டி மடக்கினார். அப்போது, எஸ்.ஐ.,யின் அருகில், வாகனத்தை நிறுத்துவது போல் வந்தவர், திடீரென வாகனத்தை வேகமாக இயக்கினார்.
வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், எஸ்.ஐ.,யின் இடது கையில் இருந்த, போலீஸ் வாக்கி டாக்கியை பறித்து வேகமாக தப்பினர்.
உடனடியாக, எஸ்.ஐ., செந்தில்குமார் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி, குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அவர்கள் வழிமாறி தப்பினர்.
இதுகுறித்து, திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசில், செந்தில்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து, வாக்கி டாக்கியுடன் தப்பிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.