ஏற்றுமதி பாதிப்பு, விளைச்சல் அதிகரிப்பு ரூ.40 ஆக குறைந்த சின்ன வெங்காயம்
சென்னை, சின்ன வெங்காயம், ‘சாம்பார் வெங்காயம், உள்ளி’ என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சேலம், நாமக்கல், திண்டுக்கல், கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரம், சிங்கப்பூர், மலேஷியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.
இதனால், கோயம்பேடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட சந்தைகளுக்கு, அவற்றின் வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு, தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. இதன் காரணமாக, அவற்றின் விலையும் சரிந்து வருகிறது.
பிப்., மாத இறுதியில் ஒரு கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முதல்தர சின்ன வெங்காயம், தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.