கலப்பட டீசலால் ‘பென்ஸ்’ கார் பழுது ஓனருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் அஜய்பாஸ்கர். இவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2022ம் ஆண்டு கொச்சியில் இருந்து சென்னைக்கு ‘பென்ஸ்’ காரில் வந்தேன். அப்போது, சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் ‘பங்க்’கில் டீசல் நிரப்பினேன்.
சிறிது துாரம் சென்ற நிலையில், திடீரென கார் இன்ஜின் பழுதானது. காரை 25,000 செலவு செய்து, இழுவை வாகனத்தை பயன்படுத்தி, சென்னைக்கு கொண்டு வந்தேன்.
பின், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் காரை பழுது பார்த்தேன். இதற்கு மொத்தம், 8.19 லட்சம் ரூபாய் செலவானது. கலப்பட டீசல் காரணமாகவே, இன்ஜின் பழுதாகி உள்ளது.
எனவே, பழுதுக்கான செலவுத் தொகையை வழங்க, பெட்ரோல் விற்பனை மையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பெட்ரோல் ‘பங்க்’ நிறுவனம் தங்கள் மீதான தவறை உணர்ந்து, பழுது பார்ப்பதற்காக காரை சென்னைக்கு கொண்டு செல்லவும், மனுதாரரின் குடும்ப உறுப்பினர்களின் பயண செலவுக்காகவும், முதற்கட்டமாக 64,000 ரூபாய் வழங்கி உள்ளது.
காரை முழுமையாக பழுது பார்த்த பின், அதற்குரிய செலவு தொகையை வழங்க பெட்ரோல் பங்க் நிறுவனம் மறுப்பது ஏற்புடையது அல்ல. எனவே, கார் பழுதுக்கான செலவு தொகை 8.19 லட்சம் ரூபாயை, மனுதாரருக்கு பெட்ரோல் பங்க் நிறுவனம் வழங்க வேண்டும்.
இதுதவிர இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.