தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற இன்ஜினியர் கைது
ஆதம்பாக்கம், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் 30வது தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன், 66. இவரது மனைவி ரோகிணி, 60. இவர்களது மகன்கள் பிரசன்ன வெங்கடேஷ், 30, ஆதித்யநாராயணன், 28.
பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற ஆதித்ய நாராயணன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
முரளிதரன் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். தன்னையும் தன் தாயையும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை என, தந்தையிடம் ஆதித்யநாராயணன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும், பெற்றோரை சாப்பிட விடாமல் தடுத்து, அடிக்கடி அடித்தும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மகனின் இந்த நிலையால், ரோகிணியும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மகனுக்கு கொடுத்த பால் திரிந்து போயிருந்தது. இதையடுத்து, ‘விஷம் வைத்து எங்களை கொன்று விடுவாயா’ என தந்தையிடம், ஆதித்யநாராயணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ஆதித்யநாராயணன் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து, முரளிதரனின் காதின் கீழ் பகுதியிலும், தொண்டையிலும் குத்தி உள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் முரளிதன் சரிந்துள்ளார்.
இதைப் பார்த்த ஆதித்யநாராயணன் தாயை அழைத்துக் கொண்டு, ஆட்டோவில் திருவல்லிக்கேணி நோக்கி புறப்பட்டார். ஆட்டோவில் செல்லும்போதே, சகோதரருக்கு நடந்த சம்பவத்தை கூறி, தான் வழக்கறிஞர் ஒருவரை பார்க்க தாயுடன் செல்வதாகக் கூறியுள்ளார்.
போலீசுக்கு தகவல்
இதை கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்,திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி, அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின், போலீசார் இருவரையும் பிடித்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே பிரசன்ன வெங்கடேசன் வீட்டிற்கு சென்று முரளிதரனை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
திருவல்லிக்கேணி சென்ற போலீசார், இருவரையும் ஆதம்பாக்கம்காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
ஆதித்யநாராயணனை கைது செய்த போலீசார், உடல்நிலை பாதிக்கப்பட்ட ரோகிணியை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.