கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் ₹18 கோடியில் நடை மேம்பாலம்: நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை, மார்ச் 4: கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் ₹18 கோடியில் பாதசாரிகளுக்கான நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரில் தினசரி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதற்காக கோயம்பேடு பகுதியில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையம் அருகே கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகமும் அமைந்துள்ளதால் கோயம்பேடு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. குறிப்பாக அலுவலக நேரம், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்து நிலையத்திற்கும், மார்க்கெட் பகுதிக்கும் வரும் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மேம்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. இதனிடையே சாலையின் குறுக்கே வாகனங்களுக்கு இடையிடையில் சாலையை கடக்கும் பயணிகளால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் கோயம்பேடு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் ₹18 கோடியில் பாதசாரிகளுக்கான நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு பேருந்து நிலைய சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் நெரிசலைக் குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹18 கோடியில் பாதசாரிகளுக்கான நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த நடைமேம்பாலம் ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த நடைமேம்பாலம் தேமுதிக அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து மாநகர பேருந்து போக்குவரத்து நிலையம் வரை கட்டப்பட உள்ளது. அதேபோல் இந்த நடைமேம்பாலத்தின் இருபுறமும் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவையும் அமைக்கப்படுகிறது. விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *