நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக் க புது முயற்சி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில், ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன.
மேலும், ‘நடைபாதை நடப்பதற்கே’ என்றும், யாரேனும் ஆக்கிரமித்தால் புகார் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் கொண்ட பலகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், நடைபாதைகள் ஆக்கிரமிப்புக்கு விடிவு கிடைப்பதில்லை. நடைபாதை தடுப்பு கற்களை உடைத்து, கடைகள் அமைப்பதும், வாகனங்கள் நிறுத்துவதும் தொடர்கிறது.
அந்த வகையில், அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் பிரதான சாலை முழுதும், சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
தற்போது, அவற்றை மாநகராட்சி அகற்றியது. மீண்டும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், நடைபாதை போன்ற வழியை ஏற்படுத்தி, இடைவெளியுடன் உயரமான தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால், வாகனங்களோ, கடைகளோ அமைக்க முடியாது. இது அப்பகுதிவாசிகள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதே போல், அனைத்து பகுதிகளிலும் நடைபாதையை விரிவுபடுத்தி, உயரமான தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.