20 மண்டலங்களுக்கு எதிர்ப்பு? மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு
அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்
சென்னை மாநகராட்சி மண்டலங்களின் நிர்வாக பகுதியை சீரமைத்து, 15 எண்ணிக்கையில் இருந்து, 20 ஆக உயர்ந்தி, பிப்., 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், மயிலாப்பூர் தொகுதியை மண்டலமாக மாற்றவில்லை. மேலும், துறைமுகம், ஆர்.கே.நகர் தொகுதிகளை இதர தொகுதியுடன் சேர்த்ததால், அங்குள்ள எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும், மணலி மண்டலம் திருவொற்றியூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டது.
இதனால், தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். கருத்து கேட்பு நடத்தாமல், மண்டலங்களை உயர்த்தியதாக அமைச்சர் நேரு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சட்டசபை தொகுதி அடிப்படையில், 23 மண்டலங்களாக உயர்த்த வேண்டும் என, அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதை நிரூபிக்கும் வகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில், கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதற்காக, நேற்று இரவு, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் உயர்த்தப்படும் மாற்றங்கள் தொடர்பாக, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட எம்.பி., – எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம், அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற உள்ளது. நாள், நேரம், இடம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது