கத்தி முனையில் வழிப்பறி வாலிபர்கள் 5 பேர் கைது
சென்னை, கூலித் தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி, மது குடிக்க பணம் பறித்த ரவுடிகள் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம், கக்கன் காலனியை சேர்ந்தவர் தினேஷ், 25; கூலித்தொழிலாளி. இவர், பிப்., 27 இரவு, அதே பகுதியில், மகாலிங்கபுரம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது, எதிரே வந்த ஐந்து பேர், மது குடிக்க பணம் வேண்டும் எனக்கூறி, கத்தியை காட்டி மிரட்டி, தினேஷிடம் இருந்து, 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, தினேஷ் அளித்த புகாரில், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள, ‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த பாலாஜி, 25, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் பிரான்சிஸ், 23, கார்த்திக், 22; பிரவீன் பாலாஜி, 24, நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 21,ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களில், பாலாஜி, அருள் பிரான்சிஸ் ஆகிய இருவரும் ரவுடிகள்; மற்றவர்கள் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.