அடுக்குமாடி கார் பார்க்கிங் திறப்பு தள்ளிவைப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. ரூ.250 கோடி செலவில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் மின்சார வாகனங்களுக்கான மின்சார சாா்ஜிங் வசதி முனையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அடுக்குமாடி கார் பார்கிங் இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து இருந்த நிலையில், தற்போது புதிய அடுக்குமாடி கார் பார்க்கிங் திறப்பு விழா தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பார்க்கிங்கில் பணியாற்றும் 123 ஊழியர்கள் பணி வழங்கக்கோரி கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாலும், தீயணைப்புத்துறையினரிடம் பாதுகாப்பு தடை இல்லா சான்று இன்னும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தாலும் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *