தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண் நடவடிக்கை எடுக்குமா குடிநீர் வாரியம்?
மடிப்பாக்கம், சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. தற்போது, 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப் பணியில், பிரதான குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது. குடிநீர் குழாயில் அனைத்து தெருக்களுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, குடிநீர் குழாய்களில் தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம், சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில், அம்பேத்கர் நகர் பிரதான சாலை மற்றும்பெரியார் நகர், ஐந்தாவதுதெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வந்து பார்த்து சென்றனர். ஆனால், இன்றளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், தண்ணீர் திறக்கும் நேரங்களில், தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகிறது. மேலும், சாலை பழுதாவதோடு, வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, குடிநீர் வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.