மணலியை பிற மண்டலங்களுடன் இணைக்க எதிர்ப்பு வளர்ச்சி பாதிக்கும் என்பதால் மறுபரிசீனை செய்ய வலியுறுத்தல்

மணலி, மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்த்தப்பட்டாலும், ஏற்கனவே உள்ள மணலி மண்டலமாக காணாமல் போகிறது. மணலி மண்டல வார்டுகளை திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் இணைப்பதற்கு, அப்பகுதி மக்கள், வணிகர்கள், கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில், 15 முதல் 22 வரை என, எட்டு வார்டுகள் உள்ளன. 42.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இங்கு, 1.02 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை குறைவானாலும், மற்ற மண்டலங்களை காட்டிலும், பரப்பளவில் பெரியது.

சட்டசபை தொகுதி அடிப்படையில், 15வது வார்டு, பொன்னேரி தொகுதியிலும், 16, 17 , 19 ஆகிய வார்டுகள் மாதவரம் தொகுதியில் அடங்கும். மேலும், 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகள் திருவொற்றியூர் தொகுதிக்குள் வரும்.

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் எண்ணிக்கை, 15 ல் இருந்து, 20 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக ஆறு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில், எட்டு வார்டுகளை கொண்ட மணலி என்ற மண்டலம் காணாமல் போகிறது.

இந்த மண்டலத்தில் உள்ள, 15,16, 18, 20, 21 ஆகிய ஐந்து வார்டுகள் திருவொற்றியூர் மண்டலத்திலும், 17, 19, 22 ஆகிய மூன்று வார்டுகள் மாதவரம் மண்டலத்தி

ல் இணைக்கப்படுகின்றன. இதன்படி, 19 வார்டுகளுடன் மாநகராட்சியில் அதிக வார்டுகளை கொண்ட மண்டலமாக திருவொற்றியூர் மாறியுள்ளது.

பொன்னேரி, மாதவரம் தொகுதிக்குட்பட்ட 15, 16 வது வார்டுகள், திருவொற்றியூர் மண்டலத்திலும்; திருவொற்றியூர் தொகுதியின், 22 வது வார்டு மாதவரம் மண்டலத்திலும் சேர்த்துள்ளது, நிர்வாக ரீதியாக குளறுபடியை ஏற்படுத்தும்.

மேலும், 1968 ல் பேரூராட்சியாக இருந்து, தற்போது, சென்னை மாநகராட்சியின், 2வது மண்டலமாக மணலி மாறியுள்ளது. தொழிற்சாலைகளும், வருவாயும் மிக அதிகம். இந்நிலையில், இந்த மண்டலத்தை வேறு மண்டலங்களுட்ன இணைப்பது சரியாக இருக்காது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

புழல் மற்றும் கொசஸ்தலை உபரி கால்வாய்களால், ஆண்டுதோறும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு, மணலி தீவு போல் மாறிவிடும். அதிகாரிகள் உட்பட யாரும் நுழைய முடியாது. அதுபோன்ற நேரங்களில், மணலியை நிர்வகிக்க தனி நிர்வாகம் அவசியம்.

திருவொற்றியூருடன் இணைத்தால், மணலிக்கு முக்கியத்துவம் இருக்காது; தவிர, வளர்ச்சி பணிகளும் பாதிக்கும். மண்டலத்தை காலி செய்து, பிற மண்டலங்களுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள், வணிகர்கள், கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடும் எதிர்ப்பு

திருவொற்றியூர் தொகுதியில் அடங்கிய, 22 வது வார்டை, மாதவரம் மண்டலத்துடன் இணைக்கக் கூடாது. இதனால், வார்டின் வளர்ச்சி பணிகள் முழுதும் பாதிக்கும். வார்டு மக்களும் விரும்பவில்லை. காரணம், சட்டசபை தொகுதியும், லோக்சபா தொகுதியும் மாறிவிடும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.- தீர்த்தி, 22வது வார்டு கவுன்சிலர், காங்கிரஸ்

கருத்து கேட்கவில்லை

மணலி மண்டலத்தை மற்ற மண்டலங்களுடன் இணைப்பது குறித்து, அப்போதைய மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியை, எட்டு கவுன்சிலர்களும் சந்தித்து கேட்டோம். கவுன்சிலர்களை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என, உறுதியளித்திருந்தார். ஆனால், எங்களிடமோ, மக்களிடமோ கருத்து கேட்கவில்லை. திடீரென மண்டலத்தை இரண்டாக பிரித்து, திருவொற்றியூர் – மாதவரம் மண்டலங்களில் சேர்த்துள்ளது ஏற்புடையதல்ல. மணலி தனி மண்டலமாக இயங்குவதை மக்கள் விரும்புகின்றனர். மீறி இணைக்கும் பட்சத்தில், இப்பகுதி வெள்ளத்தில் மூழ்கினாலும், கேட்க ஆள் இருக்காது. அரசு, மறு பரிசீலனை செய்ய வேண்டும். – ராஜேஷ் சேகர்,- 21வது கவுன்சிலர், அ.தி.மு.க.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *